பறவைக் காய்ச்சல் நோய்த்தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஜன.6 மாலை நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது,
கோழிப்பண்ணையாளர்கள் நுண்ணுயிரி பாதுகாப்பு முறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து கோழிப்பண்ணை சார்ந்த கோழி, முட்டை, கோழிக்குஞ்சுகள், தீவன மூலப்பொருள்கள் உள்ளிட்ட அனைத்து கொள்முதல்களையும் தவிர்க்க வேண்டும்.
ஒரு மாதத்திற்குள் மேற்கண்ட பொருள்கள் ஏதாவது கொள்முதல் செய்யப்பட்டு இருந்தால், அதை அழித்துவிடவேண்டும். அசாதாரண இறப்பு குறித்து உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். ஆய்வுக்கு வரும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு, பண்ணையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கால்நடைத்துறையில் உள்ள 45 அதிவிரைவுக் குழுக்கள் தினமும் பண்ணைகளைக் கண்காணிக்க வேண்டும். பண்ணைகளில் ஏற்படும் அசாதாரண இறப்புக் கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். வனத்துறையில் புதிய வனப்பறவைகளின் வரவு, அசாதாரண இறப்பு போன்றவை குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் மெகராஜ் கூறினார்.
இக்கூட்டத்தில், கால்நடைத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், கோழிப்பண்ணை அதிபர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.