அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீதான வழக்கினை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் ஐவர் குழு விசாரிக்கிறது.
தேனி மாவட்டம், போடி சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஓ.பி.எஸ். மகன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகிய இருவரும் தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் சொத்து விபரம், வருமானத்தை மறைத்து உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம், “மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என ஜனவரி 7ஆம் தேதி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது தனித் தனியே மக்கள் பிரதிநிதித்துவ சட்டபடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 9ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான ஆவணங்கள் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து குற்றப் பிரிவு டி.எஸ்.பி. சுந்தரராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி அடங்கிய குழுவினர் விசாரிக்க உள்ளனர். முதற்கட்டமாக மனுதாரரிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிலானியின் பாதுகாப்புக்கு ஒரு சிறப்பு எஸ்.எஸ்.ஐ. மற்றும் நான்கு போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்து உள்ளனர்.