திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் ஆந்திராவின் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தச்சூர் முதல் சித்தூர் வரை 116 கி.மீ. தூரம் வரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஆறு வழிச்சாலைப் போடப்படவுள்ளது. அதற்காக, 1238 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அதற்காக, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, சித்தூர் ஆகிய இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று (26/04/2022) திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் அருகே உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் மூன்றுபோகம் விளையும் நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன.நிலம் கையகப்படுத்தப்பட்டால் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள் என விவசாயிகள் வருந்துகின்றன.