110 இடங்களில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகளை அமைக்கப் போவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதைத் தடுத்து மக்களைக் காப்பாற்ற அரசு என்ன செய்யப்போகிறது? என்பதை பினாமி ஆட்சியாளர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து எண்ணெய் கிணறுகளை மூடிவிட்டு வெளியேறும் திட்டம் இல்லை என்று ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட 110 இடங்களில் புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படும் என்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருவதைப் போன்று காவிரி பாசன மாவட்டங்களை முற்றிலுமாக எண்ணெய்க் கிணறுகளாக மாற்றுவதும், இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்தால் அனைத்து அடக்குமுறைகளையும் பயன்படுத்தி ஒடுக்குவதும் தான் அரசின் திட்டமாக உள்ளது. அதனால் தான் கதிராமங்கலத்தில் அறவழியில் போராட்டம் நடத்தி வந்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதற்கு எதிராக தொடங்கிய கதிராமங்கலம் மக்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில் தான் அக்கிராமத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என்ற அடுத்தக்கட்ட குண்டை ஓ.என்.ஜி.சி நிறுவனம் வீசியிருக்கிறது.
கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று ஓஎன்ஜிசி நிறுவனம் வடிகட்டிய பொய்யை கூறியுள்ளது. எண்ணெய்க் கிணறுகள் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது. குழாய்களிலிருந்து வரும் தண்ணீரில் எண்ணெய்க் கலந்திருக்கிறது. இதை அப்பகுதியில் செயல்பட்டு வரும் அமைப்புகள் குடிநீர் தரச்சோதனை மூலம் நிரூபித்திருக்கின்றன. கதிராமங்கலம் மக்களை பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் இருமுறை சந்தித்த போதும் மஞ்சள் நிறமாக மாறிப் போன கச்சா எண்ணெய் கலந்த தண்ணீரை கொண்டு வந்து காட்டி, இந்த துயரத்திற்கு முடிவு கட்டும்படி கோரினர். ஆனால், சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 160 எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் அவற்றிலிருந்து தினமும் 600 டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. மேலும் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் காவிரி பாசனப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை... தங்களின் வருவாய் அதிகரித்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் தனியார் பெருநிறுவனங்களைப் போல செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இத்தகைய துரோகத்தை மன்னிக்க முடியாதது.
கதிராமங்கலம் பகுதியில் மக்களை சமாதானப்படுத்தி மேலும் எண்ணெய்க் கிணறுகளை அமைப்போம் என்று ஓ.என்.ஜி.சி கூறுவதை நம்ப முடியாது. உண்மையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலம் மீது அறிவிக்கப்படாத போரைத் தொடுத்திருக்கிறது. அதன் ஒரு கட்டமாகத்தான் எந்த தவறும் செய்யாத செய்யாத பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது பொய்ப்புகார் கொடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வைத்தது. இத்தகைய தன்மை கொண்ட ஓ.என்.ஜி.சி மக்கள் நலனுக்காக பாடுபடும் என்பதை பகுத்தறிவு கொண்ட எவரும் நம்ப மாட்டார்கள். இதுதான் மறுக்கமுடியாத உண்மை.
காவிரி பாசன மாவட்டங்களைச் சூழ்ந்துள்ள அத்தனை ஆபத்துக்களுக்கும் காரணம் தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும், இப்போது ஆளும் அதிமுகவும் தான். தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதனடிப்படையில் அந்த பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கு உரிமங்களை வழங்கி வருவது அதிமுக அரசு. அதிமுகவும், திமுகவும் மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் கூட இதுபோன்ற தீமைகளை போட்டிப்போட்டுக் கொண்டு செய்து வருகின்றன என்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் இப்போது அறிவித்துள்ள கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் தான் உதாரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் மக்கள் நலனை பாதிக்கும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இப்போது தமிழகத்தில் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகளை அமைக்கப் போவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதைத் தடுத்து மக்களைக் காப்பாற்ற அரசு என்ன செய்யப்போகிறது? என்பதை பினாமி ஆட்சியாளர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்.