தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கணொளி காட்சி வாயிலாக மாநகராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி இன்று கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது ஆளும் கட்சியான திமுகவை சகட்டு மேனிக்கு எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "பொங்கல் பரிசு வழங்குவதில் 500 கோடி வரை இந்த அரசு ஊழல் செய்துள்ளது. மக்களுக்கு பொங்கல் பரிசை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்கள் இந்த பரிசு தொகுப்பை வழங்கவில்லை. மாறாக இந்த திட்டத்தில் ஊழல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டத்தை ஆளும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. பரிசு தொகுப்பில் மக்கள் யாருக்கும் சந்தோஷம் கிடையாது. நிறைய பொருட்கள் கெட்டுப்போய் இருத்தது. இதுக்குறித்து நாம் ஏதாவது புகார் கூறினால், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் நம்மீது அவதூறு பரப்புகிறார்கள். 2024ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வர உள்ளது. அப்படி நடைபெற்றால் தமிழகத்தில் விரைவில் நம் ஆட்சி அமையும். இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.