Skip to main content

“வீட்டிற்கே சென்று பார்க்க முயன்றேன்” - நடிகை கனகா நிலை குறித்து வேதனையை பகிர்ந்த கங்கை அமரன்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

nn

 

தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகிலிருந்து விலகியிருக்கும் கனகா, சென்னை  ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.  

 

திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அப்பாவுடன் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை, கை கூடாத காதல் எனப் பல பிரச்சனைகளால் வீட்டில் முடங்கிய நிலையிலேயே இருந்துள்ளார் கனகா. இதனால் பல வருடங்களாக அவர் தனிமை வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே முகம் காட்டாத அளவிற்கு தனிமை அவரை ஆட்கொண்டுவிட்டது. அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு தீயணைப்புத் துறைக்கு வந்த அழைப்பில் நடிகை கனகாவின் வீட்டிலிருந்து அதிகப்படியான புகை வெளியேறுவதாக புகார் அளிக்கப்பட்டது.

 

nn

 

அதனைத் தொடர்ந்து கனகாவின் வீட்டிற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்ற பொழுது கனகாவோ வீட்டிற்குள் நுழைய தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க மறுத்ததோடு, அவர்களைத் திட்டியுள்ளார். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் சென்றபோது சிதறிக் கிடக்கும் குப்பைகள், குவியல் குவியலாகத் துணி மூட்டைகள், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு போடப்பட்ட குப்பைகள் எனக் கேட்பாரற்று வீடு கிடந்துள்ளது. பாழடைந்த நிலையில் இருந்த வீட்டில் அவர் எப்படி வசித்து வந்தார் என எண்ணத் தோன்றும் அளவிற்கு வீட்டின் நிலைமை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதுவும் எப்பொழுதும் வெளியே முகம் காட்டாத கனகா, அன்றுதான் வெளியே வந்தார் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

 

nn

 

இந்நிலையில் கனகா ஹீரோயினாக நடித்த கரகாட்டக்காரன் படத்தை இயக்கிய இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கனகா குறித்த கேள்விக்கு, ''கனகாவை பற்றிய இதுபோன்ற செய்திகளை படிக்கும்போதெல்லாம் ஏன் அந்த பொண்ணுக்கு இப்படி ஆயிடுச்சு என யோசிப்பேன். ஒருமுறை போன் செய்தபொழுது போனை எடுத்து யார் என்று கேட்டதாகவும், யார் என்று சொல்வதற்குள் போனை துண்டித்துவிட்டார். மேலும், ஒருமுறை வீட்டிற்கே சென்று பார்க்க முயன்ற நிலையில் பார்க்க மறுத்துவிட்டார். அவருடைய தந்தையால் கனகாவின் நிலை மாறிவிட்டது. அவரை கலகலப்பாக வைத்துக்கொள்ள முயல்கிறேன். ஆனால் முடியவில்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்