விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி(70). இவரது மனைவி கமலா(60). இந்த தம்பதிக்கு நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடித்து பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
வயதான இவர்களின் தாய், தந்தை மட்டும் தங்களது சொந்த ஊரான மேலமங்கலம் கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் தங்கள் பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காத காரணத்தினால் வறுமையில் வாடிய அவர்கள் தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்ந்து வந்தனர்.
மிகவும் வறிய நிலையில் இருந்து வந்த முதியோர்கள் இருவரும், தங்களை கவனிக்கவில்லையே என்று ஏக்கத்துடன் இருந்து வந்துள்ளனர். இதனால் இருவரும் விரக்தி அடைந்தனர். இதன் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்த விஷத்தை இருவரும் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் சாரங்கபாணி உயிரிழந்தார். அவரது மனைவி கமலாவும் தற்போது அபாய கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.