Skip to main content

ஒக்கிப் புயல் : இழப்பீடுகளை உயர்த்திக் கொடுப்பதும் அவசியம் - கி.வீரமணி

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
ஒக்கிப் புயல் : இழப்பீடுகளை உயர்த்திக் கொடுப்பதும் அவசியம் - கி.வீரமணி

புயலாலும், வெள்ளத்தாலும் பெரும் பாதிப்புக்கு ஆளான குமரி மாவட்ட மக்களையும், மீனவர் குடும்பத்தினரையும் இரு நாள்கள் (7, 8.12.2017) நேரில் சந்தித்து அங்கு நிலவும் உண்மை நிலவரங்களை விளக்கியும், மாநில - மத்திய அரசுகள் மேற்கொள்ளவேண்டிய உடனடி மற்றும் நிரந்தர திட்டங்களையும் விளக்கி,  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

7.12.2017 காலை காரைக்குடி திருமண நிகழ்ச்சி முடிந்து, கழகத் தோழர்களோடு குமரி நோக்கிப் பயணமானோம். இடையில் மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி கழகப் பொறுப்பாளர்களும் எம்மோடு இணைந்து வந்தனர்.

வாழைகள் - பயிர்கள் நாசம்!

வழியில் சாலையில் பகல் 2.30 மணியளவில் எல்லோரும் வாகனங்களை நிறுத்தி உணவருந்தி, பயணத்தைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் ஆரல்வாய்மொழி சென்றபோது, முகப்பில் வரவேற்றனர் கழகத் தோழர்கள்.

அங்கே குமரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர் கிருஷ்ணேசுவரி, வெற்றிவேந்தன், திருமதி. மணி, வடசேரி நல்லபெருமாள், தி.மு.க. மாவட்ட முன்னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம் ஆகியோர் வரவேற்று, பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளைப் பார்வையிட, பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனம்தோப்பு வழியே சென்று, செருமடம் சேர்ந்தோம். அங்கே கழகத் தோழர்களும், மாவட்ட தி.மு.க. பொருளாளர் கேட்சன்,  தி.மு.க. மாவட்ட முன்னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம் ஆகியோரும், மற்ற செய்தியாளர்களும் கூடி வரவேற்று, விளக்கினர்.

கொத்துக் கொத்தாக சாய்ந்த வாழைகள் ஒருபுறம்; நீரில் அமிழ்ந்து அழுகிய நெற்பயிர்கள் மறுபுறம். விவசாயிகள் தங்கள் வேதனையை விளக்கிக் கூறினர் நம்மிடம். அவர்களது துயரத்திற்கு வடிகால் தேடினர்!

ஒக்கிப் புயல் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளையும், மீனவக் குடும்பங்களையும் முந்தைய சுனாமியைப்போல் பெரிதும் திடீர்த் தாக்குதல் நடத்தி, மாவட்டத்தையே விளைநில வளத்தையும், மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு, அன்றாடம் கடல்மேல் நித்தம் சென்று பிழைப்பிற்கான தொழிலை நடத்தும் - உயிரைப் பணயம் வைத்த எம்அரும் சகோதரர்களான மனித வளத்தையும் சூறையாடியுள்ள கொடுமைகளைக் கண்டு எங்களது நெஞ்சத்தை நெக்குருக வைத்தன - பதைப் பதைப்புக்கு ஆளாக்கின!

ஒருபுறம் விவசாயிகளின் வளர்ந்த வாழ்வாதாரப் பயிர்களான வாழைகளும், ரப்பர் மரங்களும் புயலினால் அடியோடு சாய்க்கப்பட்ட கொடுமை! தாய்மார்களின் கண்ணீர் வெள்ளம் - கண்கள் குளமாயின!

இன்னொருபுறம் வளர்த்த மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன ஆயிரக்கணக்கில்!

மின் கம்பங்கள் வீழ்ந்து கிடந்தன. ஏழை பாழையான எம்மக்களின் குடியிருப்புகள்கூட இடிந்து வீழ்ந்து, வானக் கூரையைப் பார்த்தே நின்று கதறியழும் தாய்மார்களின் கண்ணீர், வேதனை வெள்ளமாகப் பாய்ந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு சோகத்தோடு அவர்கள் கதறியழுதபோது, நம் கண்களும் குளமாவதை மறைத்து, அவர்களைத் தேற்றினோம்!

அங்குள்ள வாழை, பயிர் பிரதானமானது ரப்பர். 15 கன்றுகள் வீதம் 1000 வாழைகளை வளர்த்தால், இரண்டரை லட்சம் ரூபாய் ஆண்டிற்கு செலவாகும். புயல் மழை சேதத்தினால், இரண்டரை லட்சம் நட்டம்!

பாட்டம் என்ற குத்தகை எடுப்பவர், பயிர் செய்து நில முதலாளியிடம் தந்துவிடும் நிலையில், அரசு 7 ஆயிரம்முதல் 13,500 ரூபாய்வரை மானியம் தருகிறது. எப்பொழுதும் இப்பகுதி மக்கள் அவதிப்பட்ட, ஏழ்மையும், கடனும் பெற்ற மக்களாக காலந்தள்ளும் நிலைமையே நீடிக்கிறது.

விவசாயி 15 ரூபாய் செலவழித்து உருவாக்கும் வாழைப் பயிருக்கு அரசு தரும் மானியம் 4 ரூபாய் 50 காசுகள்தான். இப்படி செருமடம், தெரிசனம்கோப்பு பகுதியில் - சேறும், சகதியும் உள்ள வயல்களில், அவர்களோடு இறங்கியும் பார்த்தோம். அவர்கள் குறைபாடுகளைப் பதிவும் செய்தோம்.

மின்சாரம் அறவே துண்டிப்பு!

அடுத்து ரப்பர் தோட்டப்பகுதியான தடிக்காரன்கோணம் கிராமப்பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவரும், தாய்மார்களும் திரண்டு கண்ணீரும், கம்பலையுமாக தங்கள் வீடிழந்து, மண்டபத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் (மின்சாரம் இல்லாததால்) தரப்படுகின்ற உணவை உண்டு கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். ரப்பர் விவசாய தொழிலாளிகளாக இருந்தும், அவர்கள் நிலைமையும் மிகவும் பரிதாப நிலையில் உள்ளது.

மலைக்கிராமங்களில் மக்கள் தவிப்பு

தி.மு.க. மாவட்ட முன்னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம், மாவட்ட முன்னாள் ஊராட்சியின் தலைவர் (தடிக்காரன்கோணம்)  ஆகியோர் நிலைமைகளை விளக்கினர். அப்பகுதி தாய்மார்கள், பெரியவர்கள் எல்லோரும் தங்களது துயரச் சம்பவங்கள், இழப்புகள்பற்றிய கண்ணீர் நிகழ்வுகளை சொன்னார்கள். நாம் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை ஆற்றுப்படுத்தினோம்!

பாராமலை, சாமிகுச்சி, பாலாமோர், கரும்பாறை, இஞ்சிக்கடவு, பஸ் கடை போன்ற மலைக்கிராமங்களில் ரப்பர் தோட்டத்தில் பால்வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள் பலர் - மேலே திக்கின்றி தவிக்கும் பரிதாபம்! இவர்களின் எண்ணிக்கை 300, 400-க்கும் மேல் இருக்கக்கூடும். அவர்களை அரசும், மாவட்ட நிர்வாகமும் ஹெலிகாப்டர் மூலமாவது மீட்டிடும் முயற்சிகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

சேதமாகி இடிந்த வீடுகளுக்குத் தரப்படும் அரசு உதவி 2,500 + 2,000 மறுபடி 10,000 ரூபாய் போதுமானதல்ல. கொத்தனார் கூலி நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் - மற்ற கட்டுமானப் பொருள் விலையோ மிக அதிகம் அதை மேலும் உயர்த்தித் தரவேண்டும் என்று கூறினர்.

குளச்சல் பகுதியில்...

மறுநாள் காலை நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு, பாதிக்கப்பட்ட, இன்னும் கரைக்குத் திரும்பாத பல நூற்றுக்கணக்கான மீனவர்களின் குடும்பங்களைக் கண்டு விசாரிப்பது என்பதற்காக குளச்சல் சென்றோம்.

அங்கு டேவிட்சன் என்ற வாலிபர், உதவி சரியான நேரத்தில் கிடைக்காததால் மரணமடைந்துள்ளார். 13 பேர் ஒரே படகில் சென்றதாகவும், 30 ஆம் தேதி ஹெலிகாப்டர் தேடுதல் உதவி கிடைத்திருப்பின், அவர்கள் மீட்கப்பட்டிருப்பார்கள் என்றும், அரசுகளின் மெத்தனம், அவர்களின் வாழ்க்கையைப் பறிப்பதற்குக் காரணமாகியது என்றும் கூறினர்.

குளச்சலில் மறைந்த சேவை சகோதரர் படத்திற்கு (அந்த சர்ச்சில் வைக்கப்பட்டிருந்தது) இறுதி மரியாதை செலுத்தினோம். அங்கு அழுது புலம்பிய அவரது தாயாரிடமும், உறவினர்களிடமும் ஆறுதல் கூறிய பிறகு, மறைந்த டேவிட்சன் இல்லம் சென்றோம். கடலோரத்தில் இருந்த எல்லையற்ற சோகத்திற்கு ஆளான அவரது வாழ்விணையருக்கும், அவருடைய சகோதரிகளுக்கும் ஆறுதல் கூறி, துக்கத்தில்  பங்குகொண்டோம். அந்த இளம் சகோதரி கதறியழுதது எங்கள் நெஞ்சங்களைப் பிளந்தது.

அப்பகுதியின் பங்குத்தந்தை ஆயர் பாதிரியார் திரு.எட்வின் அவர்களைப் பார்த்து முழு நிலவரம் கேட்டு அறிந்தோம்.

கோரிக்கை மனு

அவர்களது குறைகளைக் களைய நிரந்தரப் பாதுகாப்புத் தர, என்ன செய்தால் மீண்டும் மீண்டும் இந்த அவலங்கள், சோகங்கள் தொடராவண்ணம் செய்யப்படவேண்டும் என்பதை அவர் தந்த மனுவில் உள்ளதை அப்படியே தருகிறோம். (பெட்டிச் செய்தி காண்க).
நமது அரசு மீனவ சமுதாயத்தினரின் நிரந்தர தொழில் காப்பு, உயிர் காப்பிற்கு ஏற்பாடு செய்து, அத்திட்டங்களை உடனடியாகச் செய்தல் அவசர அவசியமாகும்.

600 மைல் நீள தமிழ்நாட்டுக் கடற்கரையில், சென்னை, கடலூர், நாகை, வேதாரண்யம், தேவிப்பட்டணம், மல்லிப்பட்டணம் போன்ற குமரிவரை உள்ள மீன்பிடித் தொழில் வாழ்வாதாரம் உத்தரவாதம் பெற நிரந்தரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவசியம் மத்திய - மாநில அரசுகள் செய்யவேண்டும்.

சார்ந்த செய்திகள்