
ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில் காதலி உயிரிழந்து விட்ட நிலையில் காதலனும் அதே இடத்தில் வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் படித்து வருபவர் யோகேஸ்வரன். இவர் அதே வகுப்பில் உடன் படித்து வரும் மாணவி சபரீனாவை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் சென்றிருந்தனர். பூஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மாணவி சபரீனா இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் பேருந்து அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே சபரீனா உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் யோகேஸ்வரன் கதறி அழுதுள்ளார். தொடர்ந்து பெண்ணின் உறவினர் வீட்டுக்கு தகவலை சொல்லிவிட்டு அங்கிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு ஓடி சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த வாகனத்தின் மீது பாய்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரே இடத்தில் காதலி, காதலன் என இருவரும் உயிரிழந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரின் உடலையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.