டெல்லியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில், டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “22 மாநிலங்களில் இலவச மின்சாரம் தந்தால் டெல்லி தேர்தலில் மோடிக்காக பரப்புரை செய்வேன். பா.ஜ.க ஆட்சியில் உள்ள 22 மாநிலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முடியுமா?. டெல்லியில் ஜனநாயகம் இல்லை. ஆளுநரிடம் இருந்து விடுவித்து மாநில அந்தஸ்து பெறுவோம். ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் என இரட்டை எஞ்சின் ஆட்சி நடக்கிறது.
இரட்டை இயந்திர அரசாங்கங்கள் என்றால் பணவீக்கம், ஊழல் மற்றும் வேலையின்மை. டெல்லியில் பஸ் மார்ஷல்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரின் சம்பளத்தை நிறுத்தினார்கள். டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தினமும் குண்டுகள் வீசப்படுகின்றன. சிறையில் எனது இன்சுலின் சப்ளை நிறுத்தப்பட்டது. என் சிறுநீரகம் செயலிழந்திருக்கலாம், நான் இறந்திருக்கலாம். எல்.ஜி.ராஜிடம் இருந்து டெல்லியை விடுவித்து முழு மாநில அந்தஸ்தைப் பெறுவோம்” என்று பேசினார்.