கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், சித்தராமையா தனது முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ சித்தராமையாவுக்கு நான் பயப்படவில்லை. இதை சித்தராமையா தெரிந்து கொள்ள வேண்டும். என்னை யாரும் பயமுறுத்த முடியாது. நான் கடவுளுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் மட்டுமே பயப்படுகிறேன். சித்தராமையா போன்ற லட்சக்கணக்கானோர் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன். எனது அரசியல் வாழ்க்கையை உருவாக்க நான் சித்தராமையாவின் பெயரை பயன்படுத்தவில்லை. சித்தராமையா தான் எனது கட்சி தொண்டர்களின் நிழலில் இருந்தவர்.
இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் சீர்குலைத்து விட்டது. பயம், மரியாதை இல்லை. இது ஒரு பொறுப்பற்ற அரசாங்கம். அதைப் பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது. அதனால்தான் தற்போதைய அரசியல் முன்னேற்றங்களுக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறுகிறேன்” என்று கூறினார்.