திருவள்ளூரில் ரவுடியின் மனைவி ஒருவர் வீட்டில் புகுந்து குடும்பத்தினர் மூன்று பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி லட்சுமணன் என்பவரின் மனைவி ரம்யா. ரவுடி லட்சுமணன் புழல் சிறையில் இருந்த பொழுது தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான விஷ்ணு என்பவருடன் பழகியுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அப்போது லட்சுமணனின் மனைவியான ரம்யாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதை லட்சுமணன் தட்டி கேட்டுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட விரோதத்தில் கடந்த 23ஆம் தேதி விஷ்ணு லட்சுமணனை நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் ரவுடி விஷ்ணு உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் தன்னுடன் முறையற்ற தொடர்பிலிருந்த விஷ்ணு கணவரை கொலை செய்ததால் ஆத்திரமடைந்த ரம்யா, தோட்டக்காடு பகுதியில் உள்ள விஷ்ணுவின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றுள்ளார். உடன் லட்சுமணனின் சகோதரர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். விஷ்ணுவின் வீட்டின் கதவைத் தட்டியபோது வீட்டில் உள்ளவர்கள் கதவைத் திறக்க மறுத்துள்ளனர். தான் போலீஸ் என ரம்யா கூறியுள்ளார். தன்னுடைய மகன் விஷ்ணு ரவுடி என்பதால் போலீசார் தங்களை விசாரிக்க வந்திருப்பதாக நம்பிய விஷ்ணுவின் குடும்பத்தார் கதவை திறந்ததுள்ளனர். அப்பொழுது அரிவாளுடன் காத்திருந்த ரம்யா, விஷ்ணுவின் தாய், தந்தை, மனைவி ஆகிய மூவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீஞ்சூர் காவல்நிலைய போலீசார் ரம்யா உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.