திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் கலைஞர் நகர் என்ற இடத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் அந்தப் பகுதி கூலித் தொழிலாளர்கள் 75 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். இந்தப் பட்டாக்களில் வீடுகளைக் கட்டிய மக்களுக்கு, அந்தப் பகுதியில் மின் இணைப்பு, சாலை வசதி, கழுவு நீர், கால்வாய் என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 20 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ, எம்.பி., எனப் பலரிடமும் மனு கொடுத்துப் போராடியுள்ளனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கப் போகிறோம் என்று ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் போர்ட் ஒன்றை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள், இந்தப் போர்டை அப்புறப்படுத்த வேண்டும். எங்களுக்கு நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில், 54 வீடுகளை நாங்கள் கட்டியுள்ளோம். பட்டாக்கள் அனைத்தும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு அடிப்படை வசதி செய்துகொடுங்கள் என்று அரக்கோணம் எம்.பி., மாவட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் என மீண்டும் பலரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்தச் சூழலில் திடீரென வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் திருத்தணி டி.எஸ்.பி.விக்னேஷ் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி. புரத்தில் குவிக்கப்பட்டனர். பின்னர் இன்று அதிகாலை 5 மணி முதல் இந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த 54 வீடுகளையும் ஜே.சி.பி.மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். அப்போது ஜே.சி.பி மூலம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்தவர்களைக் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
“வட்டாட்சியர் விஜயகுமார் எங்களிடம் வீட்டை இடிக்காமல் இருக்கும் ஒவ்வொருவரும் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் நாங்கள் பணம் எல்லாம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தால், வீடுகளை இடிக்க உத்தரவு போட்டுவிட்டோம் என்று எங்களிடம் நக்கலாகப் பேசினார். நாங்கள் இதனைக் கண்டித்து நீதிமன்றம் செல்வோம் என்று கூறியதற்கு, நீங்க எங்க வேண்டுமானாலும் சென்று சொல்லுங்கள் என்று கூறி ஆபாசமாகத் திட்டினார்” எனப் பொது மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். 54 வீடுகள் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபத்தில் இருக்கும் அந்தப் பகுதி மக்கள், எங்களது வீடுகளை இடித்ததால் தற்கொலை செய்துகொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திமுக பஞ்சாயத்துத் தலைவர் சத்யராஜ் என்பவரிடம், “ ஏன் இப்படிச் செய்தீர்கள். இதற்கு திமுக ஆட்சிதான் காரணம். கலைஞர் பட்டா வழங்கினார். அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் இடிக்க உத்தரவிட்டார். நாங்கள் கூலித் தொழிலாளிகள் இப்போது நாங்கள் எங்கே செல்வோம் என்று கண்ணீர் மல்க அந்தப் பகுதி மக்கள் முறையிட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.