Skip to main content

அரசு இடத்தை ஃபோர்ஜரி செய்து பட்டா மாற்றிய கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்...

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

The officer who changed government land to person name

 

 

அரியலூர் அருகில் உள்ள கடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் தனவேல். அந்த ஊரில் ஒரு 24 மணி நேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த சுகாதார நிலையத்தை ஒட்டியுள்ள இடத்தை மேற்படி தனவேல் என்பவர் (அரசு நிலத்தை) ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார். 

 

தான் ஆக்கிரமித்துள்ள அந்த இடத்தை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்த தனவேல், அதே மாவட்டத்தில் உள்ள காவனூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வரும் ராணி என்பவரிடம் சென்று உதவி கேட்டுள்ளார். அதன்படி அரசு ஆரம்ப சுகாதார நிலைய இடத்தை தன் பெயருக்கு பட்டா மாற்ற, உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதற்கு ராணியும் சம்மதித்தார். தனவேலிடம் இருந்து பட்டா மாற்றம் செய்யும் மனுவை எழுதி வாங்கிய ராணி, கடுகூர் கிராம நிர்வாக அலுவலராக உள்ள சரஸ்வதியின் அலுவலகத்தில் உள்ள சீல்களை பயன்படுத்தியும் சரஸ்வதியின் கையெழுத்தையும் ராணியே போட்டு அதை அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து அந்த இடத்தை தனவேல் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து அதற்கான உத்தரவை வாங்கி கொடுத்துள்ளார். 

 

இந்த தகவல் கடுகூரில் உள்ள பொது மக்களுக்கு தெரிய வந்துள்ளது. உடனே ஊர் மக்கள் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ரத்னாவுக்கு புகார் எழுதி அனுப்பினார்கள். புகாரை பார்த்த மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை செய்யுமாறு அரியலூர் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.  கோட்டாட்சியர் விசாரணையில் அரசு இடத்தை தனவேல்  பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ராணி உடந்தையாக இருந்து செயல்பட்டு பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார் என்பது உண்மை என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளித்தார். 

 

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்கள் அரசு ஊழியராக இருந்துகொண்டு தவறான வழியில் பட்டா மாற்றம் செய்து கொடுத்த காரணத்திற்காக  கிராம நிர்வாக அலுவலர் ராணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு அந்த பட்டாவையும் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். தனவேல் என்பவருக்காக கிராம நிர்வாக அலுவலர் ராணி இவ்வளவு தூரம் சிரத்தை எடுத்து போலித்தனமாக கையெழுத்து போட்டு பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டிய அவசியமென்ன ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கினாரா? அதுதான் இல்லை பட்டா மாற்றம் செய்து கொண்ட தனவேலுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட காவனூர் கிராம நிர்வாக அலுவலர் ராணி தனவேலுவின் சொந்த மகள். அப்புறம் என்ன பெற்று வளர்த்து படிக்க வைத்து கிராம நிர்வாக அலுவலராக வேலை கிடைக்க காரணமாக இருந்த தந்தைக்கு மகள் செய்த உபகாரம் சஸ்பெண்ட்டில் போய் நிற்கிறது. இவரை போன்று அரசு ஊழியர்கள் அரசு அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அரசு சொத்துகளை கபளீகரம் செய்து கொண்டால் நாடு என்ன ஆகும்? என அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்