நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி பல்வேறு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஐந்தாம் கட்டத் தேர்தல் மே 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று (18-05-24) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இதனையடுத்து, அடுத்தக்கட்டத் தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சிவப்பு நிற அட்டை கொண்டு அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். மேலும் அவர், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்றும், அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான இது தான் கடைசி தேர்தல் என்றும் பேசி வருகிறார். ராகுல் காந்தி வைத்திருக்கும் சிவப்பு நிற அட்டை கொண்டு அரசியலமைப்பு சட்டப் புத்தகம் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தனது கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களிடம் சிவப்பு சீன அரசியல் சாசனத்தை ராகுல் காட்டுகிறார்.
நமது அரசியலமைப்பு, நீல நிறத்தில், மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் என்று அழைக்கப்படும் ஒரு அத்தியாயத்தை உள்ளடக்கியது. நீல நிறம் கொண்ட நமது அரசியலமைப்பு புத்தக்கத்தில், பொது சிவில் சட்டத்தை இயற்றுவதை ஒரு புனிதமான கடமையாக ஆக்குகிறது. இதற்கு ராகுல் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால்தான் அவர் கையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் சீனச் சட்டமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.