கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் பகுதியில் மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கிர்கிஸ்தான் மற்றும் எகிப்திய மாணவர்கள் இடையே மோதல் வெடித்தது. மேலும், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உள்ள சில விடுதிகள் தாக்கப்பட்டன. இதில், வெளிநாட்டு மாணவர்களும் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து, கிர்கிஸ்தான் பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, கிர்கிஸ்தானில் உள்ள இந்தியா தூதரகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘நாங்கள் எங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது.
ஆனால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் செயல்படும். எங்களின் தொடர்பு எண் 0555710041 என்ற எண்ணில் மாணவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளது.