சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடமும், அயனாவரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திடமும் சில தகவல்களை வழங்கக் கேட்டு, சிற்றரசு என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அந்த விவரங்களை வழங்கப்படாததால், சிற்றரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்த போது, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு, தொடர்ந்து தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தகவல் ஆணையம் அளிக்கும் தகவல்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை எதிர்த்து மேல் முறையீட்டு அதிகாரியிடம் மேல் முறையீடு செய்ய தகவல் உரிமைச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார் நீதிபதி. மேலும் தவறான தகவல்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக, விண்ணப்பங்களுக்கு அளிக்கும் பதில்களின் ஒவ்வொரு பக்கத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரி கையெழுத்திடுவதுடன், அவரது ஆதார் விவரங்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இது சம்பந்தமாக தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.