Skip to main content

தரமற்ற பிரியாணி; ஓட்டல்களுக்கு பறந்த நோட்டீஸ்

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

Notices to hotels selling substandard food

 

தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு ஓட்டல்களில் சாப்பிட வருபவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு, அதை சாப்பிட்ட சிலர் மரணித்துள்ளனர். இதில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக அசைவ உணவு பிரியர்கள் மிக அதிக அளவில் விரும்பி சாப்பிடுவது பிரியாணி. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எதிரே அசைவ ஹோட்டல்கள் நிறைய பெருகியுள்ளன. அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வாடிக்கையாளர்கள் சிலர் சாப்பிட சென்றுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணி கெட்டுப் போனதாகவும் அந்த பிரியாணியில் இருந்த கோழி இறைச்சி கெட்டுப்போன இறைச்சியாக இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் இடமும் சப்ளை செய்தவர்களிடமும் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கேள்வியுற்ற போலீசார் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் அடிப்படையில் நேற்று விழுப்புரம் நகரில் உள்ள அசைவ ஹோட்டல்கள், பிரியாணி கடைகள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு நியமனஅலுவலர் சுகுந்தன் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின், ராஜரத்தினம் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்புபழனி, கதிரவன், ஆகியோர் கொண்ட குழு நகரில் உள்ள அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது ஆய்வில் அரசால் தடைச் செய்யப்பட்ட பிளாஸ்டி பைகள், நிறம் மாற்றப்பட்ட கோழி இறைச்சிகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

அவற்றை பறிமுதல் செய்த குழுவினர், வெளியே கொண்டு சென்று அழித்தனர். இதுபோன்ற 5 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சம்பந்தமான சட்டப்பிரிவு 2006-யின் கீழ் அந்த சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மேலும் தரமற்ற உணவு வழங்கும் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர்ந்து செயல்பட்டால் ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல ஓட்டல்களில் அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அதில் சுவையை சேர்ப்பதற்காக பல்வேறு மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் கலவைகளை கலந்து சுவையாக கவர்ச்சிகரமாக கொடுத்து சாப்பிட வைக்கிறார்கள்.

 

இதை சாப்பிடும் பலர் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தெருவோரங்களில் அனுமதியின்றி மாமிச இறைச்சி கடைகளை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் சாலையோரங்களில், தெரு ஓரங்களில் மாமிச கடைகள் தொடர்ந்து செயல்படுகின்றன. அதேபோல் அசைவ ஹோட்டல் நடத்துபவர் வாடிக்கையாளர்களை சுவை என்ற பெயரில் கலப்படம் செய்து தரமற்ற இறைச்சியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்