முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் மரங்களை அப்புறப்படுத்தியுள்ளோம். போக்குவரத்தை சீரமைத்துள்ளோம். தண்ணீர் தேங்காமல் செய்துள்ளோம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த மழையினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் சென்னையிலும் 2 பேர் காஞ்சிபுரத்திலும் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 25 குடிசைகள் முழுமையாகவும், 138 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. வீடுகளைப் பொறுத்தவரைப் பகுதியாக 18 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
694 மரங்கள் சேதமடைந்துள்ளன. 10,843 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மரங்களை அப்புறப்படுத்தியுள்ளோம். போக்குவரத்தை சீரமைத்துள்ளோம். தண்ணீர் தேங்காமல் செய்துள்ளோம்.
40 இயந்திர படகுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. கட்டுமரங்கள் முழுமையாகச் சேதமடைந்தால் 32 ஆயிரம் ரூபாயும் பகுதியாகச் சேதமடைந்தால் 10 ஆயிரம் ரூபாயும் தரப்படுகிறது. பைபர் படகுகள் முழுமையாகச் சேதமடைந்தால் 75 ஆயிரம் ரூபாயும் பகுதியாகச் சேதமடைந்தால் 20 ஆயிரம் ரூபாயும் தரப்படும். இயந்திர படகுகள் முழுமையாகச் சேதமடைந்தால் 5 லட்சமும் பகுதியாகச் சேதமடைந்தால் 3 லட்சமும், வலைகளுக்கு 10,000 ரூபாயும் தரப்படும்” என்றார்.