Skip to main content

“அமைச்சர்கள் நியமனத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை” - அப்பாவு

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

“No one has the authority to interfere in the appointment of ministers” - Father
கோப்புப் படம் 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்குக் கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையைத் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியது.

 

இந்த பரிந்துரையை ஆளுநர் மறுத்து திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் திமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள். இதில் யார் யாருக்கு எந்தத் துறையை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதின் முழு அதிகாரமும் முதலமைச்சருக்கே உள்ளது. அதில் வேறு யாரும் தலையிடுவதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் கிடையாது. வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

 

தமிழ்நாடு அரசு அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு குறித்து ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக இலாகா மாற்றப்படுவதாகவும் கூறியிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அமலாக்கத்துறை கைது செய்ததை அந்த கடிதத்தில் குறிப்பிடாததால் ஆளுநர் அதனைத் திருப்பி அனுப்பியதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்