
நேற்று நடைபெற்ற தவெகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உரையில், 'மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே... மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பேரை மட்டும் வீரப்பா சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் அவர்களே... ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என அழைக்கப்படுது. இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அது பாசிச ஆட்சிதானே.தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் தான் உங்களுடைய அரசியலுக்கு முடிவு கட்டப் போகிறார்கள்' எனப் பேசியிருந்தார்.
விஜய்யின் பேச்சுக்கு திமுக தரப்பில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சினிமா வரி பாடல் தான் நினைவுக்கு வருகிறது. 'மன்னர் ஆட்சி காத்து நின்றது எங்கள் கைகளே; மக்களாட்சி காணச் செய்தது எங்கள் நெஞ்சமே; என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே; கல்லில் வீடு கட்டி தந்தது எங்கள் கைகளே; கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே' என்ற பாடல் வரிகளை தான் அவர்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன்.

பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026 ஆம் ஆண்டு தூக்கிப்பிடிப்பார்கள். இன்று எங்கு போனாலும் தமிழக முதல்வர் வரவேற்கின்ற கூட்டம் எதுவென்றால் அதில் என்பது சதவீதம் பெண்கள் கூட்டம் தான். எங்களைச் சுற்றி நிற்பவர்கள் கூட சென்னையின் மேயர் பெண்தான். பக்கத்தில் இருக்கின்ற சுகாதார நிலைக் குழு தலைவர் பெண், அதன் பக்கத்தில் இருக்கின்ற மண்டல குழு தலைவர் பெண். இந்த பகுதியினுடைய ஹெல்த் ஆபிசர் பெண் என இப்படி எங்கும் பெண்கள் சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது என்பது தான் எங்களுடைய பதில்.
விஜய் தவழுகின்ற குழந்தை நாங்கள் பி.டி.உஷா போல் பல்வேறு ஓட்டப்பந்தங்களை கண்டு வெற்றி பெற்றவர்கள். பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். ஆனால் அவர்கள் சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; போராட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; ஆர்ப்பாட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்து அதை போட்டோ எடுத்து போட்டுக் கொண்டு அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருப்பது தான் தமிழகத்தின் நிலை. இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்'' என்றார்.