வேலூரில் உள்ள தனியார் பல்கலைழக நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மத்தியமைச்சர் நிதின்கட்காரி செப்டம்பர் 28ந்தேதி மதியம் வேலூர்க்கு வருகை தந்திருந்தார்.

அவரின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க திமுகவை சேர்ந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி கதிர்ஆனந்த், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்தியமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பியின் மகன் ராஜா போன்ற திமுக முக்கியஸ்தர்கள் காத்திருந்தனர்.
அதேபோல், அதிமுகவை சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினரான ராணிப்பேட்டை முகமதுஜான் கட்காரியை வரவேற்க காத்திருந்தார். கட்காரி வருகை தந்ததும் திமுக, அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் போட்டி போட்டுக்கொண்டு சால்வை அணிவித்து, பூங்கொத்து தந்தனர்.
வேலூர் எம்.பி கதிர்ஆனந்த் கட்காரியிடம் தன் தொகுதிக்கு தேவையென ஒரு மனுவை தந்தார். அதில், சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை வேலூர் பாராளுமன்ற தொகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையில் அதிகமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு விபத்துக்களை தடுக்க ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்மென கோரிக்கை மனுவை தந்தார்.