







திருச்சி காவிரி ஆற்றில் வெயிலை பொருட்படுத்தாமல் அய்யாகண்ணு உள்ளிட்ட 17 விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி சென்றும் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நடத்தி வரும் போராட்டங்களிலும் பங்கேற்று வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை திருச்சியில் த.மா.கா. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் திடீரென அங்கிருந்து காவிரி ஆற்றிற்கு சென்றனர். அங்கு மண்ணில் புதைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. அப்பகுதிக்கு சென்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அய்யாகண்ணு உள்ளிட்ட 12 விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம் என்பதற்காக நெற்றியில் நாமமிட்டும், கழுத்தில் மாலை அணிந்தும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோஷம் எழுப்பினர்.