
அட்டாரி - வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும், இந்திய ராணுவப் படையினருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில், அதிகளவில் ராணுவப் படையினர் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கூறினாலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சில பயங்கரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியா சந்தேகிக்கிறது. அந்த பயங்கரவாத அமைப்பை, பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி முடிவுகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும், வாகா எல்லை மூடப்படும் என்றும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தது. இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, அட்டாரி எல்லை மூடப்படும் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்கும் எல்லையான வாகா - அட்டாரி எல்லையில் இருக்கும் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்கும் நிகழ்வுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இரு நாடுகளும் எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ள நிலையில், எல்லையில் நாள்தோறும் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரே சாலை வழி வணிக பாதையான வாகா - அட்டாரி எல்லையில், ஒவ்வொரு மாலையிலும் இரு படைகளால் எல்லை வாயில் திறக்கப்பட்டு இருநாட்டு வீரர்களும் கைகுலுக்குவர். இந்த நிகழ்வை, கடந்த 1959ஆம் ஆண்டு இரு நாடுகளும் கடைபிடித்து வருகிறது. 1972 போர், புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல் நடந்த போதிலும் வழக்கம் போல் நடைபெற்று வந்த இந்த நிகழ்வு, சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலால் நிறுத்தப்பட்டுள்ளது.