Skip to main content

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

Published on 25/04/2025 | Edited on 25/04/2025

 

TNPSC Group 4 Exam Date Announcement

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு இன்று (25.04.2025)  வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனப்பாதுகாவலர் மற்றும் சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இது தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ச. கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர். வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி - 4 பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இன்று முதல் 24.05.2025 தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு 12.07.2025 அன்று நடை பெறும்.

2018 முதல் 2025 வரையுள்ள 6 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி - 4 பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 4 மூலம், கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) 2022ஆம் ஆண்டு அறிவிக்கையில் மூன்று நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ஆம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் ஐந்து நிதியாண்டுகளுக்கு 177190 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -4  மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக ஒரு நிதியாண்டிற்கு (2025-25) 3678 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு திரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025ஆம் ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மேலும், 2025ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்