
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.
ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். இந்த 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்’ எனத் தெரிவித்திருந்தது. எனவே கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி 10 மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாளான 2023ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு இன்றும், நாளையும் (ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26ஆம் தேதி) என இரு நாட்கள் உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடர்ந்து 4வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலை. துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகைக்குச் சென்ற நிலையில் தனது முடிவை மாற்றி துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரும் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே துணைவேந்தர்களின் மாநாட்டுக்கு சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. இதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “துணை வேந்தர்களின் வருடாந்திர மாநாடு குறித்த சில தவறான ஊடக அறிக்கைகள் சமீபத்திய நாட்களில் ஆளுநர் மாளிகைக்கும் (ராஜ்பவனுக்கும்) மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி போல் வெளிவந்துள்ளன. இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை. உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்களின் வருடாந்திர மாநாடுகள் 2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தமிழக ஆளுநரால் கவனமாகத் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.