தற்பொழுது கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட ஊர்களுக்குட்பட்ட, குறிப்பிட்ட ஐந்து வீடுகளில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து சோதனையிட்டு வருகின்றனர் தேசிய புலனாய்வு அமைப்பினர்.
இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின்னர் இலங்கை அரசிற்கு உதவியாக இந்திய உளவு அமைப்புக்கள் குறிப்பாக என்.ஐ.ஏ.எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறையும் உதவி குண்டுவெடிப்பிற்கு காரணகர்த்தாக்களை தேடி வந்தது. இதனின் ஒரு பகுதியாக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதக் குழுக்களைத் தேடி தீவிர சோதனையில் ஈடுப்பட்டது என்.ஐ.ஏ. அமைப்பு. தமிழகத்தில் ராமநாதபுரம், கோவை, மதுரை, திருவாரூர், நாகை மற்றும் சென்னையில் நடத்தப்பெற்ற சோதனையின் அடிப்படையில் தீவிரவாத குழுக்களின் பல ஆவணங்கள் சிக்கியது.
இதேவேளையில் என்.ஐ.ஏ.அமைப்பினர் இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக துபாயில் கைது செய்யப்பட்ட முஹ்ம்மது ஷேக் மொஹ்தீன் - மதுரை. முஹம்மது அசாருதீன் - திருவாரூர், ராஃபிக் அஹம்மது - சென்னை, முஹம்மது அப்சர் - தேனி, மொய்தீன் சீனி ஷாகுல் ஹமிது - கீழக்கரை, முஹம்மது இப்ராஹிம் - நாகப்பட்டிணம், மீரான் கனி - தேனி, குலாம் நபி ஆசாத் - பெரம்பலூர், ரஃபி அஹம்மது - ராமநாதபுரம், முன்தாப்சீர் - ராமநாதபுரம், உமர் பாஃரூக் - தஞ்சை, பாஃரூக் - வாலிநோக்கம் - அருப்புக்கோட்டை, பைசல் ஷெரிஃப் - ராமநாதபுரம், முஹம்மது இப்ராஹிம் - திருநெல்வேலி உள்ளிட்ட 14 நபர்களை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.
இது இப்படியிருக்க, இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெருப் பகுதிகளில் உள்ள ரபி அகமது, பைசல் ஷெரீப், முன்தாப்சீர், முகைதீன் சீனி, சாகுல் அகமது ஆகியோர் இல்லங்களிலும் வாலிநோக்கம் பகுதியில் உள்ள பாரூக் இல்லத்திலும் சோதனையிட வெள்ளிக்கிழமையன்றே ராமநாதபுரத்திற்கு வந்த 15 என்.ஐ.ஏ. அதிகாரிகள் அன்று தொழுகை நாள் என்பதால் ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமிற்கு அருகிலேயே தங்கியவர்கள், சனிக்கிழமையன்று உள்ளூர் போலீசாரின் துணையுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் 5 உள்ளூர் போலீசார் என்ற அடிப்படையில் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.