தடைச்செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் உறவில் இருப்பவர்கள், உதவுபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துக்களைப் பரப்புவர்களை குறிவைத்து சோதனையிட்டு வருகின்றது தேசிய புலானிவு முகமையான என்ஐஏ. தொடர் பரிசோதனையில் கோவை, நாகூரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்ஐஏ அதிகாரிகள்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையத்தார் உதவியுடன் இன்று அதிகாலை முதலே காயல்பட்டிணம் கேடிஎம் தெரு ரசாக் மருத்துவமனை அருகிலுள்ள சாலிக் வீட்டினை சோதனையிட்டு வருகின்றனர் என்ஐஏ அதிகாரிகள். ஆத்தூரில் திருமணம் செய்துள்ள சாலிக் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். தற்பொழுது அவர் வாடகை சவாரிக்காக வெளியூர் சென்ற நிலையில், அங்கிருந்த உறவினர்கள் மத்தியில் சோதனையிட்டு கைப்பேசி மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "
ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாட்டை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மற்றபடி இயக்கத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது." என்கின்றனர் அவரது உறவினர்கள். எனினும், சென்னையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வந்து ஆஜராக சம்மன் கொடுத்து சென்றுள்ளது என்ஐஏ. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.