ஒரே தறியில் இரண்டு நாடாக்களை போட்டு நெசவு நெய்யும் தறியை கண்டுபிடித்த சின்னாளபட்டி சேரன் பள்ளி மாணவிகள் ஐந்து பேர் நாளைய விஞ்ஞானிகளாக தேர்வு பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர்கள் ஒவ்வொரு வருடமும் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பரிசுகளை பெற்று வருகின்றனர். கடந்த வருடம் இயற்கை சூழலுக்கு ஆபத்து விளைவிக்காமல் குறைந்த மின்செலவில் செயல்படும் குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்து பரிசு பெற்றனர்.
இவ்வருடம் திஇந்து தமிழ் நாளிதழும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய ஆராய்ச்சிமன்றம் மதுரையில் இணைந்து நடத்திய மண்டல அளவிலான நாளைய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சியில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு பெற்றனர்.
அதன்பின்பு வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, இராணுவ விஞ்ஞானி டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற தமிழக அளவிலான நாளைய விஞ்ஞானிகள் நிகழ்ச்சியில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் எம்.சுஜா, ஆர்.திவ்யதர்சினி, ஜி.சரயுதேவி, பி.சசக்திஐஸ்வர்யா, எம்.தர்ஷினிஸ்ரீ ஆகிய ஐந்து பேர் கண்டுபிடித்த ஒரே தறியில் இரண்டு நாடாக்களை போட்டு லிவர் மூலம் இரட்டை நாடாக்களை கொண்டு விரைவாக நெசவு நெய்யும் தறியை கண்டுபிடித்ததற்காக பாராட்டும், பதக்கமும், ரொக்கப் பரிசும் பெற்றனர்.
இதுகுறித்து நாளை விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளில் எம்.சுஜா கூறுகையில், "கடந்த 2017ம் வருடம் நாங்கள் 9ம் வகுப்பு படித்த போது இத்தறியை கண்டுபிடித்தோம். இரட்டைநாடாவை செயல்படுத்துவதற்கான முறைகளில் சிறிய குளறுபடி இருந்தது. அதன்பின்பு நாங்கள் இரண்டு வருடம் கழித்து நெசவாளர்கள் நெய்யும் தறிக்கூடங்களுக்கு சென்று ஆராய்ந்து அவர்களுக்கு எளிய முறையில் சிரமமில்லாமல் விரைவாக பட்டு மற்றும் கைத்தறி புட்டா பருத்தி சேலைகளை நெய்வதற்கு இந்த சிறப்பு தறியை கண்டுபிடித்தோம்.
மண்டல அளவிலான போட்டியில் தேர்வு பெற்ற பின்பு வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான நாளை விஞ்ஞானிகள் போட்டியில் பரிசும், பாராட்டு சான்றிதழும் பெற்றோம். எங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக உறுதுணையாக இருந்த எங்கள் பள்ளி முதல்வர் என்.திலகம் அவர்களுக்கும், எங்கள் பள்ளி ஆசிரியையும், எங்களது வழிகாட்டியுமான ஆர்.பாண்டிச்செல்வி அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சின்னாளபட்டியில் உள்ள நெசவாளர்களின் குறையை தீர்ப்பதற்காக இந்த சிறப்பு இரட்டைநாடா தறியை நாங்கள் கண்டுபிடித்தோம். இதன்மூலம் அவர்கள் நெசவு நெய்தால் ஐந்து நாட்களுக்கு ஒரு பட்டுசேலையை நெய்த நெசவாளர்கள் மூன்று நாட்களில் ஒரு பட்டுசேலையை அவர்களால் தயாரிக்க முடியும். இதுதவிர சேலையில் எவ்வளவு புட்டாக்கள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்" என்றனர்.
தாங்கள் படிக்கின்ற பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐந்து மாணவிகள் கண்டுபிடித்த இந்த இரட்டை நாடா தறியை தமிழக கைத்தறி நெசவாளர்கள் மனதார பாராட்டி வரவேற்றுள்ளனர்.