பெட்ரோல், டீசலை உடனடியாக ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்பட்டதில் இருந்து இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பெரும் துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து வருகிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பைசா கணக்கில் உயர்த்தியே பெட்ரோல், டீசல் விலையை புதிய உச்சத்திற்கு கொண்டு வந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு கலால் வரியையும், மாநில அரசு வாட் வரியையும் உயர்த்தியதே தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்து அனைத்து தொழில்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளால் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி வேண்டாம் என்று மக்கள் எதிர்த்த பொருட்களின் மீது வலுக்கட்டாயமாக ஜி.எஸ்.டியை அமல்படுத்திய மத்திய அரசு, அனைத்துதரப்பினரும் ஆதரிக்கும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர மறுப்பது மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு தற்போது கலால் மற்றும் வாட் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயை விட குறைவாக கிடைக்கும். இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும். மத்திய, மாநில அரசுகளின் வருவாய் இழப்பை கணக்கிட்டு செயல்படும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை மட்டும் கணக்கிடாதது வேதனையளிக்கிறது.
எனவே ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்தை முன்னெடுத்து ஜி.எஸ்.டியை கொண்டு வந்த மத்திய பாஜக அரசு உடனடியாக பெட்ரோலையும், டீசலையும் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.