தமிழகத்தில் கரோனா தொற்றுள்ளவர்களில் கணிசமானவர்கள் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களே. இதைக் காரணம்காட்டி, சிலர் கரோனா தொற்றுக்கு மதச்சாயம் பூசினார்கள். கரோனா ஜிகாத் என்றும் பரப்பப்பட்டது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் திண்டுக்கல் நகரைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பேகம்பூர், மக்கான்தெரு, பூச்சி நாயக்கன் பட்டி. ஜமால் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு சீல்வைத்து முழுமையாகக் கண்காணித்து வருகிறார்கள்.
கரோனா பரவியதற்குக் காரணமே முஸ்லிம்கள்தான் என்ற அச்சத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் பிறதரப்பு மக்கள். இதனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்குச் சென்றால் கூட, தீண்டத்தகாதவர்கள் போல முஸ்லிம்களை நடத்துகிறார்கள். இதைவிடக் கொடுமையாக, முஸ்லிம் மக்களுக்கு உடல் சுகவீனம், பிரசவம் போன்ற சிகிச்சைகளைச் செய்யச் சில தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளரான யசார் அராஃபத், "சமீபத்தில் நிறைமாதக் கர்ப்பிணியான அந்தப் பெண்ணை, வழக்கமாக சிகிச்சை பெறும் நாகல்நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். ஆனால், அங்கிருந்த லேடி டாக்டர் முஸ்லிம்களுக்கு சிகிச்சை அளிக்கமாட்டோம் என்று கூறிவிட்டார். மேலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் இதுவே நடந்ததால், காந்திகிராமத்தில் இருக்கும் கஸ்தூரிபாய் மருத்துவ மனையில் சேர்த்தோம்.
இப்போது அந்தப் பெண்ணுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. ஒருவேளை வழியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும். ஸ்கேன் செண்டர்களிலும் முஸ்லிம் பெண்களைப் புறக்கணிக்கிறார்கள். சொந்த பந்தங்களாக பழகிக்கொண்டிருந்த சமூகத்தில், ஒரு வெறுப்புப் பிரச்சாரம் எங்களைத் தனிமைப் படுத்துகிறதே'' என்றார் வருத்தமான குரலில்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஜய லட்சுமியிடம் கேட்டோம், "நிறைமாதப் பெண்ணுக்கு முஸ்லிம் என்பதால் சிகிச்சையளிக்க மறுத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபற்றி தீவிரமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். உண்மை இருக்கும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வோம்'' என்று உறுதியளித்தார்.