![nel jayaraman](http://image.nakkheeran.in/cdn/farfuture/8v3vQ75TYQvM1WUqaQUYWDoVr5QLSr8o3_ZtCBxQlQY/1544094762/sites/default/files/inline-images/nel%20jayaraman%2007.jpg)
நெல்.ஜெயராமன் பணிகளை அனைவரும் இணைந்து முன்னெடுப் போம். அதுவே, அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
நெல் ஜெயராமன் மறைவு குறித்து தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு - ஆதிரங்கத்தில் பிறந்து, சுற்றுச்சூழல் ஆர்வலராக வளர்ந்து, ஒரு விவசாய போராளியாக வலம் வந்தவர் நெல்.ஜெயராமன்.
தனது அயராத முயற்சிகளின் மூலம், நடைமுறையில் காணாமல் போன 174 வகையான பாரம்பர்ய நெல் விதைகளை மீட்டெடுத்தது அவரது வரலாற்று சாதனையாகும்.
அத்தோடு நில்லாமல் "நெல் திருவிழா " நிகழ்ச்சிகள் மூலம் அவற்றை சந்தைப்படுத்தி, அன்றாட உணவுகளில் அவற்றை இடம் பெற வைத்த அவரது உழைப்புக்கு நாடு நன்றி கடன் பட்டுள்ளது.
காவிரி உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகளுக்கான வாழ்வாதார போராட்டங்கள் ஆகியவற்றில் முன் வரிசையில் நின்று களமாடியவர்.
மண் மீது பற்றுக் கொண்ட, அவரை புற்றுநோய் சிறைப்பிடித்தது ஒரு கொடுமையாகும்.
அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் செய்தியை தோழர் P.R. பாண்டியன் கூறியபோது, ஓடோடி சென்று அவரைப் பார்த்தோம். ஆறுதல் கூறினோம்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜூடன் சென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவரது மருத்துவ செலவுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
அன்று மாலையே தமிழக அரசு அவருக்கு 5 லட்சம் ரூபாயை மருத்துவ செலவுக்காக அறிவித்தது. நேற்று தான் அந்த தொகை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று விடிகாலை அவர் உயிர் பிரிந்தது என்ற துயர செய்தி அனைவரையும் வாட்டுகிறது.
அவர், நெல்மணிகளை கண்மணிகளைப் போல், காத்திட்ட பொன்மணியாக வாழ்ந்தார். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினர் மற்றும் அனைவரின் துயரத்திலும், மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது.
அவரது பணிகளை அனைவரும் இணைந்து முன்னெடுப்போம். அதுவே, அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். இவ்வாறு கூறியுள்ளார்.