நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தேடப்பட்டுவந்த உதித்சூர்யா நேற்று குடும்பத்தோடு திருப்பதி மலை அடிவாரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் உதித்சூரியாவை குடும்பத்தோடு இரவு 2 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
நீட் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்யப்பட்ட வழக்கில் தேனி மாவட்ட காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டு, உதித்சூர்யாவை கைது செய்ய சென்னை புறப்பட்டுச் சென்றது. அங்கே, குடும்பத்தோடு உதித்சூர்யா தலைமறைவானார். குடும்பத்தினர், உறவினர்களின் செல்போன் எண்களின் சிக்னல்களை வைத்து உதித்சூர்யாவின் குடும்பத்தை தேடிவந்தது தனிப்படை.
இதற்கிடையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட உதித்சூர்யாவை நெருங்கியிருந்த தனிப்படைக்கு இது பேரதிச்சியாக இருந்தது. இருப்பினும், காவல்துறை அதிகாரிகளுக்கு அப்போதைய நிலையை எடுத்துச் சொல்லி உதித்சூர்யாவை பின் தொடர்ந்து சென்றது தனிப்படை. இந்நிலையில் நேற்று காலை, திருப்பதி மலையடிவாரத்தில் வைத்து குடும்பத்தோடு உதித்சூர்யா கைது செய்யப்பட்டார். அவர்கள், சென்னை சிபிசிஐடி தலைமையகத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்கே ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை தேனி அழைத்துவந்தது சிபிசிஐடி.
இதற்கிடையில், சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி ஹாட்வின் ஜெகதீஸ்குமார், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு நேற்று மாலை 7 மணிக்கு வந்தார். தேனி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் சித்ராதேவியிடம் ஆலோசனை செய்தார். பின்னர், உதிசூர்யாவை தேடுவதற்கு அமைக்கப்பட்ட தனிப்படையில் உள்ள ஆண்டிப்பட்டி ஆய்வாளர் உஷா, தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு வந்து, இதுவரை செய்த விசாரணை ஆவணங்களை டி.எஸ்.பியிடம் ஒப்படைத்தார். இன்று, சி.பி.சி.ஐ.டி எஸ்.பி விஜயகுமார் தேனி வர இருக்கிறார்.
தொடர்ந்து உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட இருக்கிறது. தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மூன்று பெண் மருத்துவர்கள் ஆகியோரிடமும் இன்று விசாரணை நடைபெறலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகமே பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.