சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கள்ளப்பாளையம் சாலை, மேட்டுத்தெரு, கா.புதூர் பேருந்து நிலையம், அங்காளம்மன் கோயில் தெரு, வெள்ளாண்டிவலசை, நைனாம்பட்டி, தாவாதெரு, கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை சக்கைப்போடு போடுகிறது.
கழுதைப்பாலில் அதிகளவு மருத்துவ குணங்களும், நோய் எதிர்ப்பு ஆற்றலும் இருப்பதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுவதால், கிராமப்புற மக்கள் ஆர்வத்துடன் கழுதைப்பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். மக்களிடம் உள்ள வரவேற்பு காரணமாக 50 மி.லி. உள்ள ஒரு சங்கு கழுதைப்பால் 50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதுகுறித்து கழுதைப்பால் வியாபாரிகள் கூறுகையில், ''கடலூர் மாவட்டம் திட்டக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். அங்கிருந்து ஊர் ஊராகச் சென்று கழுதைப்பாலை விற்பனை செய்து வருகிறோம்.
மஞ்சள் காமாலை, வாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி கழுதைப்பாலில் இருக்கிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போட்டிப்போட்டு கழுதைப்பாலை வாங்கிக் குடிக்கின்றனர்'' என்றனர்.