
















ஆண்டுதோறும் நவராத்திரி விழாக்களின்போது வீடுகளில் கொலு அமைத்து வழிபடுவது வழக்கம். 9 நாட்கள் வைக்கப்படும் கொலுவில் விதவிதமான பொம்மைகள் வைக்கப்படும். சப்த கன்னிகள், விஷ்ணுவின் தசாவதாரங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம், ஆகிய புராணக் கதைகளை விளக்கும் வகையில் பொம்மைகள் அமைக்கப்படுவதோடு. வருடா வருடம் ட்ரெண்டிங்குக்கு ஏற்றார்போல் புது வகையான பொம்மைகளை கொலுவில் வைக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கடந்த 3-ந் தேதி முதல் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் சார்பில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இங்கு தாவரங்கள், ஊர்வனங்கள், பறவைகள், விலங்குகளின் பொம்மைகள், செட்டியார்-செட்டியம்மை மற்றும் குபேர பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள், சங்கீத மூவர் பொம்மைகள், ஞானிகளின் பொம்மைகள், முப்பெரும் தேவிகளின் பொம்மைகள், அஷ்டலட்சுமி அவதாரம், விஷ்ணுவின் தசவாதாரம், நவநரசிம்மர், கைலாச ஈசன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் விஷ்ணு, சீதா கல்யாணம், மீனாட்சி கல்யாணம் என விதவிதமான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புது வரவுகளாக அண்மையில் காட்சி அளித்த காஞ்சீபுரம் அத்திவரதர் சயனம் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் கிரிக்கெட் வீரர்கள், ஹட்டோரி, டோரிமான் உள்ளிட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.