Skip to main content

வாஞ்சிநாதன் மீது தே.பா.சட்டம் பாய தடை!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
vanchi

 

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக வழக்கில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் மனைவி நந்தினி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  " எனது கணவர் வாஞ்சிநாதன் தூத்துக்குடியில் ஸ்டைர்லைட் ஆலையை மூடக் கோரி போராடி வந்த பொதுமக்களுக்கு சட்ட உதவிகள் வழங்கி வந்தார். மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலமாக பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு போராடி வரும் பொதுமக்களுக்கும் சட்ட உதவிகள் செய்து வந்தார். 

 

இந்நிலையில் தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஜூன் 20ம் தேதி சென்னை விமான நிலையத்தில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் சிறையில் இருக்கும் அவர் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை தொடர்ந்து வருகிறார்கள். மேலும் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்து உள்ளதாகவும் தெரிகிறது. ஆகவே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

 

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம் - ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வாஞ்சிநாதன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது எனவும் இந்த வழக்கில் வாஞ்சிநாதன் மீது இதுவரை போடப்பட்டுள்ள வழக்குகள் போக காவல்துறை வழக்குகள் போடக்கூடாது எனவும் தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் எனவும் கூறி வழக்கு விசாரனையை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்