ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ஒவ்வொரு இந்தியரும் உணர்வுப்பூர்வமான தொடர்பை மூவர்ணக் கொடியுடன் கொண்டிருப்பதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் கடுமையான உழைப்பு உத்வேகம் அளிப்பதாகவும் கூறினார். மேலும், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில், அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து, தற்போது தமிழக பா.ஜ.க பிரமுகராக இருக்கும் நமீதா தனது கணவருடன் சென்னை தியாகராய நகரில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்தார்.அங்கு வந்த நமீதா தபால் நிலைய அதிகாரிகளிடம் இருந்து தேசியக் கொடியை வாங்கினார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இந்திய தேசியக் கொடியை எனது வீட்டு மாடியில் ஏற்றுவேன். நீங்களும் இதை செய்யுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழக முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலையின் நடைபயணம் மிகவும் நன்றாக இருக்கிறது. கூடிய விரைவில் நானும் இந்த நடைபயணத்தில் இணைந்து கொள்ளப் போகிறேன். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பா.ஜ.க தான் ஆட்சிக்கு வ்ரும். மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்” என்று கூறினார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த நமீதா, “வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கலாம்” என்று கூறினார்.