எடப்பாடி – ஓ.பி.எஸ் அணியின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது அதிமுகவின் மற்றொரு அணியான ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆர்-ரும். இதற்கு பதிலடி தர புதியதாக தொலைக்காட்சியும், செய்தித்தாளும் தொடங்க முடிவு செய்தனர் முதல்வரும், துணை முதல்வரும். அந்த பணியை நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் ஒப்படைக்க கடந்த 24ந்தேதி முதல் ஆளும்கட்சியான அதிமுகவில் எடப்பாடி – ஓ.பி.எஸ் அணி சார்பில் நமது புரட்சித்தலைவி அம்மா என்கிற தினசரி செய்தித்தாள் வெளிவருகிறது. அந்த செய்தித்தாளில் நிறுவனர் எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் என்கிற பெயர் இருக்கிறது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நமது புரட்சித்தலைவி அம்மா என்கிற பத்திரிக்கை ஏற்கனவே வெளிவருகிறது. அந்த பத்திரிக்கையின் நிறுவனர் திருவண்ணாமலை மாவட்டம், போளுரை சேர்ந்த கோவிந்தன் என்கிற ஜெயகோவிந்தன். அதிமுகவின் நீண்ட கால உறுப்பினரான இவர் தற்போது தலைமை கழக பேச்சாளராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நமது புரட்சித்தலைவி அம்மா என்கிற பெயரில் பத்திரிக்கையை பதிவு செய்து, ஆர்.என்.ஐ எண் வாங்கி நடத்திவந்தார். ஜெயலலிதா பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை என்றாலும் அது நட்டத்தில் இயங்கிவந்தது.
சமீபத்தில் ஜெயகோவிந்தனை அழைத்து பேசிய அமைச்சர் வேலுமணி, தினமும் ஒரு லட்சம் காப்பி பிரிண்ட் செய்து தமிழகத்தில் உள்ள நம் கட்சியின் அனைத்து கிளைகளுக்கும் இலவசமாக அனுப்ப வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜெயகோவிந்தனும் சந்தோஷமாக சரியென்றுள்ளார். பின்னர், மற்றொரு பேச்சுவார்த்தையில் நிறுவனர் என்கிற இடத்தில் முதல்வர் பழனிச்சாமி பெயரும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெயர் வரவேண்டும் என்றுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டவர் என்னை ஆசிரியராகவோ, துணை ஆசிரியராகவோ நியமிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். அப்போது சரி, சரியென தலையாட்டிய அமைச்சர் வேலுமணி, இதற்கு பிரதிபலனாக ஓரளவு பணம் தந்துள்ளார்.
ஆனால் வாக்கு தந்தப்படி ஆசிரியராக அவரை நியமிக்கவில்லை. மருது அழகுராஜ்ஜை நியமித்தனர். துணை ஆசிரியராகவும் நியமிக்கவில்லை என்பதால் நொந்துப்போய் தனது நண்பர்களிடம் வெதும்பி புலம்பியுள்ளார்.
நாம் இதுப்பற்றி கருத்து கேட்க ஜெயகோவிந்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் வெளியூரில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன் என கட் செய்துவிட்டார்.
தங்களை உருவாக்கி கோபுரத்தில் உட்காரவைத்தவர்களையே கீழே தள்ளியவர்கள் இருவரும். கட்சி தொண்டனெல்லாம் அவர்களுக்கு சாதாரணம் என்கிறார்கள் தினகரன் தரப்பினர்.
- ராஜா