புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு நிதியில் இருந்து கிராமங்களில் கட்டப்படும் பாலங்கள், அமைக்கப்படும் சாலைகள் அனைத்தும் ஊரகவளர்ச்சி முகமை அதிகாரிகளின் சாதனை படைப்புகளாகவே உள்ளது.
கடந்த மாதம் 3 ந் தேதி அறந்தாங்கி பணிக்கன்வயல் சாலையை பற்றி எழுதினோம். கடந்த வாரத்தில் பொன்னமராவதி செவலூர் விலக்கு சாலையில் மண்ணால் கட்டப்பட்ட பாலம் பற்றியும், ஒலியமங்கலம் வழியாக செல்லும் புதிய சாலை கைகாளால் அள்ளப்படும் நிலையில் உள்ளதைப் பற்றியும் அதிகாரிகளின் சாதனைப் படைப்புகளாக வாசர்களுக்கு படங்களுடன் கொடுத்தோம். இந்தநிலையில்தான் அதே பொன்னமராவதி ஒன்றியத்தில் மற்றும் ஒரு படைப்பாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்.. ஒலியமங்கலம் கிராமத்தில் உள்ள குளத்து தண்ணீர் ஊருக்குள் சென்றுவிடாமல் தடுக்கவும் தண்ணீரை தேக்கி வைக்கவும் தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (மத்திய அரசு நிதிதான்) அன்னக்காரன் குளத்திற்கான தடுப்புச் சுவர் கட்டும் பணி. முழுமையாக 100 நாள் வேலை ஆட்களை வைத்து கட்டப்பட்டதாக அந்த விளம்பர பதாகை சொல்கிறது. மேலும் அந்த பதாகையில் அந்த சுவர் அமைக்க பொருள் கிரயம் ரூ. 6 லட்சத்தில் 56 ஆயிரத்தி, 882, சுமார் 4 ஆயிரத்தி 300 நபர்கள் ஒரு நாளைக்கு ரூ. 229 சம்பளத்தில் வேலை செய்துள்ளனர். ஆக சுவர் கட்டி முடிக்க சம்பளம் ரூ. 9 லட்சத்தில் 87 ஆயிரத்தி 118. ஆக மொத்தம் குளத்தின் தடுப்புச் சுவர் கட்டி ரூ. 16 லட்சத்தில் 44 ஆயிரம் முழுமையாக பதாகையில் கணக்கு எழுதப்பட்டுவிட்டது.
இந்த பணிகளை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர். இத்தனை மனித உழைப்பு, பொருள் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவர் பலமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அந்த கிராம மக்களுக்கு..
ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த சுவற்றில் ஒரு ஆடு போகும் போது உடைந்து மணல் கொட்டியதைப் பார்த்த இளைஞர்கள் வெறுத்துப் போனார்கள். உடனே செல்போனில் வீடியோ ஓடவிட்டபடியே சுவர் முழுவதும் கை விரலால் அழுத்திக் கொண்டே போக சாதனைக்காக மணலில் கட்டப்பட்ட சுவர் உடைந்து கொண்டே வந்தது. இந்த சாதனையை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிட்டுள்ளனர்.
இது குறித்த இளைஞர்கள் கூறும் போது.. மத்திய அரசு கிராமங்களுக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கி கொடுக்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்த பணத்தை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் முழுமையாக பங்கு போட்டு எடுத்துக் கொண்டு 30 சதவீதம் கூட செலவு செய்யாமல் தரமற்ற பணிகளை செய்து வருகிறார்கள். எங்க ஊர் வழியாக செல்லும் சாலையில் தார் கலவையே இல்லாமல் ஆயிலை கலந்து ரோடு போட்டுட்டு போயிட்டாங்க. இப்ப தடுப்புச் மழைத் தண்ணீர் ஊருக்குள் வந்துவிடாமல் தடுக்க தடுப்பு சுவர் கட்டி இருக்காங்க. முழுமையாக மணல் மட்டுமே உள்ளது. விரலில் அழுத்தினால் உடையுது தண்ணீர் நிறைந்தால் எப்படி தடுக்கும் இந்த சுவர். சுவர் இருந்த சுவடே காணாமல் போய்விடும். அத்தனையும் கரைந்து போகும். யாராவது இந்தப் பக்கம் வங்தால் அவர்கள் மேல் விழுந்து விபத்துகள் தான் ஏற்படும்.
மத்திய அரசு நிதியில் இத்தனை மோசடி நடப்பது தெரிந்தும் மாவட்ட ஆட்சியர் ஏன் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறார் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. அதைவிட பா.ஜ.க தலைவர்கள் அவர்களின் ஆட்சிக்கு ஏற்படும் கெட்ட பெயரை தடுக்கவாவது இந்த பணிகளை நல்ல செய்ய சொல்லலாம் அவர்களும் தயங்குவது ஏனோ என்றனர். எல்லாம் பண மயம்.. ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் அடுத்த படைப்பும் விரைவில் வெளிவரலாம்... காத்திருப்போம்...