அரசு வேலைகளில் கணவரை இழந்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக அரசு அறிவிப்புகளும் அரசியல் மேடைகளிலும் பலமாக உள்ளது. ஆனால் அப்படி எல்லாம் வேலை கொடுக்க முடியாது பணம் இருந்தால் தான் வேலை என்று புறக்கணிக்கப்பட்ட கைம்பெண்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடிப் பணியாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடக்கிறது. தகுதியானவர்களுக்கு வேலை கொடுக்காமல் பணம் கொடுப்பவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு சில பெண்கள் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. அதனால் அங்கன்வாடிப்பணியாளர் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தமில்லாமல் பணி ஆணை வழங்கப்பட்டுளளது. தகுதி இருந்தும் பணி உத்தரவு கிடைக்காத கைப்பெண்கள் 25 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கைம்பெண்களுக்கு முன்னுரிமை என்று சொல்கிறார்கள் நாங்களும சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால் கைம்பெண்ணுக்கான இடத்தில் கூட வெளிநாட்டில் இருப்பவர் மனைவிக்கு வேலை கொடுத்திருக்காங்க. அதுக்காக ரூ 3 லட்சம் வரை பணம் கைமாறி இருக்குது. அப்பறம் ஏன் கைம்பெண் சான்றிதழ் கொடுக்கனும் என்று குமுறி கண்ணீர் விட்டனர்.
தெற்கு புதுவயல் சித்திரா.. 24 வயசுல 3 குழந்தைகளையும் என்னையும் விட்டுட்டு அட்டாக்குல என் கணவர் இறந்துட்டார். 5 வருசமா என் 3 குழந்தைகளை வச்சுகிட்டு படாத பாடுபடுறேன். தினம் தினம் ஆண்களின் தொல்லைகளில் இருந்து தப்பிக்கவே போராடவேண்டியுள்ளது. கடந்த 5 வருசமா அங்கன்வாடிப் பணியாளர் வேலைக்காக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து போராடுறேன் கிடைக்கல. இப்ப ஒரு வாய்ப்பு கிடைத்து. எனக்கு வேலை கிடைக்கும் 3 குழந்தைகளையும் படிக்க வைக்கலாம் என்று இருந்த நேரத்தில் தான் வெளிநாட்டில் இருக்கிறவர் மனைவிக்கு வேலை கொடுத்திருக்காங்க.
100 நாள் வேலையும் 100 நாள் தான். விவசாயம் இல்ல. ஆண்களிடம் இருந்து காப்பாற்றிக்க போராடனும். அப்பறம் எப்படி வேற வேலைக்கு போகமுடியும். கைம்பெண்ணுக்கு வேலையா பணத்துக்கு வேலையான்னு கேட்டா நாங்க என்ன செய்றதுன்னு சொல்றாங்க.. கைப்பெண்கள் வாழ்றதா? சாகுறதான்னு அரசாங்கம் தான் முடிவு சொல்லனும். எங்களைப் போல பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வெளியே வரமுடியாம வீட்டுக்குள்ளேயே இருக்காங்க நாங்க சிலர் தான் வந்திருக்கிறோம் என்றார் கண்ணீரோடு.