
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள கிராமம் ஆண்டாபுரம். இந்த கிராமத்தில் செல்வம் என்பவர் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது விவசாயத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிருக்கு இன்று (07.04.2025) தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி இளஞ்சியம், பேரக்குழந்தைகளான ஐவிழி மற்றும் சுஜித்தும் சென்றுள்ளனர்.
அப்போது பேரக்குழந்தைகளான இருவரும் வயலில் விளையாடிக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் இருவரும் வயலை சுற்றியுள்ள வேலி அருகில் விளையாடச் சென்றுள்ளனர். முன்னதாக மின்சார கம்பத்தில் இருந்து மின் மோட்டாருக்கு செல்லும் வயரானது வேலியில் உராய்வு ஏற்பட்டு வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத குழந்தைகள் இருவரும் வேலியைத் தொட்டதும் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் குழந்தைகள் அலறித் துடித்துள்ளனர். இதனைக் கண்ட பாட்டி இளஞ்சியம், குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் மூவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பேரக்குழந்தைகள் இருவரும் பாட்டியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.