வேலூர் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகள் நளினியை சந்திக்க அவரது தாயார் பத்மாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நளினியை விடுவிக்க முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்று கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்களை விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 9-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 7-வது நாளாக அவர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.
சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நளினி சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மாவதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும் நளினியை பார்க்க அவரது தாயார் பத்மாவிறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், நளினியை விடுவிக்க முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்று கூறியுள்ளார்.