கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதேசமயம் நக்கீரனில் இது தொடர்பான செய்திகளை தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில் நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரனின் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்கள் மீதான இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினரும், திரைப் பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் “கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் வார இதழ் செய்தியாளர் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உயர் சிசிக்சை அளிக்க வேண்டும். மக்களுக்கு செய்திகளைத் தரும் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதிசெய்வதுடன்,அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.