
தொடர் கொள்ளை, வழிபறியில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர்.
நாகப்பட்டினம் நல்லியாந்தோட்டத்தை சேர்ந்த செல்லத்துரையின் மகள் மகாலெட்சுமி. இவர் நாகை சர் அகமது தெருவில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தொலைபேசியை பிடிங்கி சென்றனர். இதனை அடுத்து அந்த பெண் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அக்கரைபேட்டையை சேர்ந்த நடராஜன் மகன் பூபாலன், சின்னத்தம்பி மகன் பிரவீன் என தெரியவந்தது. அதன் பின்னர் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மாதவன் என்பவரது இருசக்கர வாகனம் திருடுபோனதில் இவர்களது கைவரிசை இருப்பது தெரியவந்தது. அதில் பூபாலனும், வாசு, நவீன் உள்ளிட்ட மூன்று பேரும் முக்கிய நபர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட இரண்டு கொள்ளை சம்பவத்திலும் மேலும் பல வழிபறியில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.