







ஓடம்போக்கி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் பாப்பாகோவிலுக்கு அடுத்துள்ள நரியங்குடியில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் கடைமடை பகுதியின் கடைசி கதவணை அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட உடைப்பில் வெளியேறிய தண்ணீர் அந்த கிராமத்தை மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளையும் மூழ்கடித்துள்ளது. மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாப்பாகோவில், நரியங்குடி உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 300 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், சாகுபடி செய்திருந்த இரண்டு மாத சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் பயிர்கள் அழுகும் அபாய நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் மழைநீர் குடியிருப்புகளுக்கு உள்ளே சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டின் உள்ளே சூழ்ந்த மழைநீரை அப்புறப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதுவரை அரசு அதிகாரிகளோ, அரசியல் கட்சியினரோ வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை என்று கலங்குகிறார்கள் அப்பகுதி மக்கள்.
பொதுமக்கள் கூறுகையில், அரசு தங்களுக்கு முதலில் தற்காலிக முகாம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.