
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் கூட்டணிக் கணக்குகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தார். இதனால் பாஜக- அதிமுக கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் திமுக தலைமயிலான கூட்டணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. அக்கூட்டணியே 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் 'வரும் 2026 ஆம் தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி இருக்கும்' என அண்மையில் நடைபெற்ற முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இப்படியாக அரசியல் கட்சிகள் தங்களின் அடுத்த சட்டமன்ற தேர்தல் குறித்த முன்னேற்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தொடக்கத்தில் இருந்தே ஆண்கள் பாதி பெண்கள் பாதி என 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரியார் எதிர்ப்பை கையிலெடுத்த நிலையில் பெரும் தோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிட தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கான சுற்றுப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேதாரண்யம் தொகுதியில் அக்கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் அக்கட்சியிலிருந்து காளியம்மாள் வெளியேறிய நிலையில், அவர் நிறுத்தப்பட்ட வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.