கொள்ளை நோய் கரோனாவைத் தடுக்க தேசமெங்கும் மக்களைத் தனிமைப்படுத்துகிற வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணியிலிருந்து அவசர நிலைப் பிரகடனம் செயல்படத் தொடங்கிவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை அது தொடர்பான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. மாவட்டங்கள் கூட முடக்கப்பட்டு இதரப் போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் மக்களைக் கூட விடாமல் தனிமைப்படுத்தி கரோனாவைக் கட்டுப்படுத்துகிற நோக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
ஆனால் இதை மக்கள் சிலர் அலட்சியப்படுத்துகின்றனர். தேவையில்லாமல் சிலர் வெட்டியாக வெளியே சுற்றிவரத் தொடங்கினர். தற்போது அவைகளைக் கட்டுப்படுத்துகிற வகையில் காவல் துறை தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும் மக்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காத வரை தனித்திருத்தல் சாத்தியமில்லை தான். இத்தனைக்குமிடையே கல்வியறிவில் முன்னேறிய நகரங்கள் கூடச் செய்ய முடியாத, மறந்த, காரியத்தை , செயல்பாட்டைச் சமூக விலக்கை கடைபிடித்து தங்களின் மக்களைக் காப்பாற்றுவதில் முன்னோடியாக மாடலாக, தேசத்திற்கே முன் மாதிரியாகியிருக்கிறது தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்ந்தமரம் நகரமருகேயுள்ள தன்னூத்து என்கிற கிராமம்.
சுமார் 700 வீடுகளைக் கொண்ட விவசாய கூலி மக்களையுடைய 3500 எண்ணிக்கையிலான ஜனத்தொகையைக் உள்ளடக்கிய இந்தக் கிராமம், முக்கியப் பகுதிகளிலிருந்து, ரிமோட் ஏரியாவில் உள்ளது. கிராமம் தானே என்று நினைப்பதற்கில்லை. இங்குள்ள இளைஞர்கள் கொரோனாவின் தீவிரத் தன்மையை ஊருக்குச் சொல்லி அந்தத் தடுப்பு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். தங்களின் கிராம எல்லையில் தடுப்பு வேலியை அமைத்து அதில் தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு போர்டையும் வைத்துள்ளனர். உள்ளூர் நபர்களைத் தவிர வெளியூர்க்காரர்கள் கிராமத்திற்குள் வர கண்டிப்பாக அனுமதியில்லை என்று பார்வையில்படும்படி எழுதியுள்ளனர். ஒரு வேளை உள்ளூர்காரர்கள் வெளியே சென்று விட்டு ஊருக்குள் வர வசதியாக தடுப்பு வேலியருகில் சோப்பு மற்றும் தண்ணீர் வாளியையும் வைத்திருக்கின்றனர். அறிவிப்பின்படி கை கால்களை சோப்பு கொண்டு கழுவி விட்டு ஊருக்குள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதைப் பார்த்து வியந்துபோன அதிகாரிகள் சமூக விலக்கு, விழிப்புணர்வு ஏற்பட்டு முன் மாதிரியாகிப் போன தன்னூத்துக் கிராம மக்களைப் பாராட்டியதுடன் அனைத்து கிராமங்கள், நகரங்கள் இது போன்று செயல்பட்டால் கொடூர கரோனாவை விரட்டியடிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். நமக்கான பாதுகாப்பு நாமேதான் என்பதை உணர்ந்திருக்கிறது தன்னூத்து கிராமம்.