Skip to main content

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்த பெரும்பாலான கட்சிகள் ஆதரவு!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

Most of the parties support to hold Plus Two examination in Tamil Nadu!

 

அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா, ரத்து செய்யப்படுமா என்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

 

இந்நிலையில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது பற்றி 13 சட்டமன்றக் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று (05.06.2021) காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

 

இக்கூட்டத்தில் திமுக சார்பில் அரசு கொறடாவான கோவி. செழியன், காங்கிரசின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை, அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 13 கட்சிகளின் பிரதிநிதிகளில் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னதாக பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேர்வு நடத்த வேண்டாம் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட நான்கு கட்சிகளும் தேர்வை நடத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். திமுக சார்பில் அரசு கொறடா கோவி. செழியன் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்தலாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். அதிமுக நடுநிலை என தெரிவித்துள்ளது. மதிமுக, விசிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தேர்வை நடத்த வலியுறுத்தியுள்ளது.

 

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி,  ''இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள் கருத்துக்கள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்'' என தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுவது தொடர்பான கருத்துக் கேட்பில்  60% கல்வியாளர்களும், பெற்றோர்களும் தேர்வு நடத்தலாம் என கருத்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்