2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் அவை ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நாம் அனைவரும் மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் நிற்கின்றோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்சி ஆரம்பித்த பொழுதில் இருந்த அதே எழுச்சியோடும் வேகத்தோடும் நாம் இன்றும் களம் காண்கிறோம்.
இதற்கு முதல் காரணம், நாம் களம் கண்ட முதல் தேர்தலில் பெருமளவில் வாக்குகள் அளித்து, நம்மீது அவநம்பிக்கை கொண்டோரையும் ஆச்சரியத்தில் இமை உயர்த்த வைத்த நம் மக்களே.
நம் மனதிற்கு உரமேற்றிய அவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமிது. அரசியலை வெகுதூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு, நான் கட்சி ஆரம்பித்தவுடன் கொஞ்சமும் தயங்காமல் என்னோடு கைகோர்த்து கட்சி வளர்க்கும் நம் நிர்வாகிகள் கள வீரர்கள் அனைவரும் கரம் குலுக்கி பாராட்டப்பட வேண்டியவர்களே.
என் கனிவோடு, என் கண்டிப்பையும் பொறுத்துக்கொண்டு, கடந்த 38 ஆண்டுகளாக என் நிழலிலும், எனக்கு நிழலாகவும் இருக்கும், என்றைக்கும் எனது அடையாளமாக இருக்கப் போகும் “நற்பணி இயக்கத்தை” கட்டிக்காத்து வரும் என் தோழர்களை நன்றியுடன் நினைக்கிறேன்.
இதுவரை என்ன செய்தோம் என்று கேட்போர் பாராட்ட நாம் சில செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. அதற்கான பரிட்சை வெகு அருகில்.
“ஓய்விற்கு மட்டுமல்ல, யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை” அடுத்து வரும் நாட்களெல்லாம் “செயல்” “செயல்” மட்டுமே..... இன்று தொடங்குவோம் அதற்கான பணிகளை...
2021-ல் வென்று தொடங்குவோம் மக்கள் பணிகளை.... வாழ்த்துக்களோடும், நன்றிகளோடும், நம்பிக்கையோடும் நாளை நமதே! இவ்வாறு கூறி உள்ளார்.