
மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக 4 நாட்கள் பயணமாக சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய ராகுல் காந்தி அங்கு நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஒன்றில், “சாதி என்பது இந்தியாவில் ஒரு அடிப்படைப் பிரச்சினை. இந்தியாவின் அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களை சமூக அநீதிகளில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான விரிவான திட்டங்களை வகுக்க முடியும்.
சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விரிவான புரிதல் ஏற்பட்ட பிறகு அதைச் சரிசெய்வதற்கான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். அதில் ஒன்றுதான் இட ஒதுக்கீடு. நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்று என்னைப் பற்றி யாரோ தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். நான் ஒருபோதும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததில்லை. 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வேண்டும் என நான் பலமுறை கூறி வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறையை ஒழிக்க ராகுல்காந்தி நினைப்பதாக சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது.
இந்த நிலையில், சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே தரப்பு) எம்.எல்.ஏ சஞ்சய் கெய்குவாட், இட ஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் தருகிறேன் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க நினைப்பதாக அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இது காங்கிரஸ் உண்மை முகத்தை உணர்த்துகிறது. இட ஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்று கூறிய ராகுலின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.